கடைசி டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 247 ரன்னுக்கு ஆல் அவுட் : தெ. ஆப்ரிக்காவுக்கு 241 ரன்கள் இலக்கு

ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 247 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், தென்னாப்ரிக்கா அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26

ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 247 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், தென்னாப்ரிக்கா அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 187 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும் சேர்த்தனர். பின்னர், ஆடிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 194 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அம்லா 61 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியாவை விட 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய் உடன் பார்தீப் பட்டேல் களம் இறங்கினார். அதிரடியாக விளையாட நினைத்த பார்தீவ் பட்டேல் 15 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 13 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

42 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா அணி இன்று தொடர்ந்து விளையாடியது. ராகுல் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் விஜய்யுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். விஜய் 127 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். உணவு இடைவேளை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. 

இதைத்தொடர்ந்து, கோலி (41), பாண்டியா (4), ரகானே (48), புவனேஸ்வர் குமார் (33), சமி (27), பும்ரா (0) என சீரான இடைவேளையில் விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், இந்திய அணி 247 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், தென்னாப்ரிக்க அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இன்னும் 2 தினங்கள் எஞ்சியிருப்பதால், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பந்துவீச்சில் அசத்தும் பட்சத்தில் இந்திய அணி இந்தத் தொடரில் ஆறுதல் வெற்றி பெறும். 

Newsletter