ஜுனியர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி

ஐ.சி.சி. ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 131 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஜனவரி 26

ஐ.சி.சி. ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 131 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஐ.சி.சி. ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், காலிறுதி  போட்டிகள் நடைபெற்றன. குயின்ஸ்டவுன் நகரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே காலிறுதி போட்டி நடந்தது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, விளையாடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (40) மற்றும் மன்ஜோத் கல்ரா (9) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் சுப்மன் கில் (86), அபிஷேக் சர்மா (50) அதிகளவிலான ரன்களை சேர்த்தனர். தேசாய் (34) மற்றும் ரியான் பராக் (15) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை குவித்ததால், இந்திய அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது. இதனால், வங்கதேசம் வெற்றி பெற 266 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து, விளையாடிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் பினக் கோஷ் (43) மற்றும் முகமது நயிம் (12) ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஆபிப் உசைன் (18), சயீப் ஹசன் (12), நயீம் ஹசன் (11), மகிதுல் இஸ்லாம் (10) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.  ரொபியூல் ஹேக் (14) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

வரும் 30-ம் தேதி நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நாளை நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Newsletter