ஐ லீக் கால்பந்து போட்டி: கேரளாவிடம் வீழ்ந்தது சென்னை

'ஐ லீக்' கால்பந்து போட்டியில் கேரளாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி தோல்வி அடைந்தது.


கோவை, ஜனவரி 20

'ஐ லீக்' கால்பந்து போட்டியில் கேரளாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி தோல்வி அடைந்தது.

சென்னை சிட்டி கால்பந்து கிளப் சார்பில், தேசிய அளவிலான சிறந்த 10 அணிகள் மோதும் ஐ லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், கொல்கொத்தா ஈஸ்ட்பெங்கால் கிளப், மோகன்பகான், கோவா சர்ச்சில் பிரதர்ஸ், இம்பால் நெரோகா கால்பந்து கிளப், ஐஸ்வால் கால்பந்து கிளப், பஞ்சாப் மினர்வா கிளப், கேரளா கோகுலம் கிளப், இந்தியன் ஏரோஸ், ஷில்லாங் கால்பந்து கிளப், சென்னை சிட்டி கால்பந்து கிளப் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.



இந்த நிலையில், கோவை நேரு மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சென்னை அணி, கோகுலம் கேரளா எப்சி அணியோட பலப்பரீட்சை நடத்தியது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களமிறங்கிய சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெரும் என ராசிகாரர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். 

ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சென்னை அணிக்கு 5 முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை சென்னை வீரர்கள் சரியாகப் பயன்படுத்த தவறினர். இதனால், முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுவுமின்றி முடிந்தது.

பின்னர் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்காக கடுமையாக போராடினர். இதன்பலனாக, ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் கேரள அணியின் கிவி ஸிமோமி கோல் அடித்து அசத்தினர். இதற்கு பதிலடி கொடுக்க சென்னை அணி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இறுதியில், கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது. 

உள்ளூர் மைதானத்தில் 3வது போட்டியில் விளையாடும் சென்னை அணி, உள்ளூர் ரசிகர்களுக்கு இன்னும் வெற்றியை சமர்ப்பணம் செய்யாதது அனைவரிடத்தில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை சுமார் 8,500 ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

சென்னை அணி தனது அடுத்த போட்டியில் இந்தியன் ஆரோஸ் அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter