ஹீரோ ஐ லீக்: சென்னையை வீழ்த்த புது வியூகம் அமைக்கும் கேரளா

சென்னை அணியை வீழ்த்த புது வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் சென்னை அணிக்கு நெருக்கடி அளிப்போம் என கோகுலம் கேரளா கால்பந்து அணியின் பயிற்சியாளர் மினோ ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 19

சென்னை அணியை வீழ்த்த புது வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் சென்னை அணிக்கு நெருக்கடி அளிப்போம் என கோகுலம் கேரளா கால்பந்து அணியின் பயிற்சியாளர் மினோ ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.



 

ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 2017 நவம்பர் 25ம் தேதி துவங்கி வரும் மார்ச் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கிழக்கு வங்க கிங்பிஷர் அணி, மினர்வா பஞ்சாப் கால்பந்து கழகம், நெரோகா கால்பந்து கழகம், ஷிலாங் லஜோங் கழக அணி, மோகன் பகன், ஆஸ்வால் கால்பந்து கழக அணி, சென்னை நகர கால்பந்து அணி, இந்தியன் ஏரோஸ், கோகுலம் கேரள கால்பந்து கழகம் மற்றும் கோவாவைச் சேர்ந்த சர்ச்சில் பிரதர்ஸ் அணி என இந்தியாவின் தலை சிறந்த 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். 10 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை கால்பந்தாட்ட கழக அணி 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 சமன், 5 தோல்வி பெற்றுள்ளது. கடைசியாக ஆஸ்வால் கால்பந்து கழக அணியுடன் விளையாடிய போட்டியில் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை அணி தோல்வியுற்றது.

இதனால் நாளை கோகுலம் கேரள கால்பந்து அணியுடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

இதனிடையே இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சென்னை நகர கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தரராஜன் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், 'நாளைய ஆட்டம் தங்களுக்கு மிக முக்கியமானது. தாக்குதல் ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற முயல்வோம். 

முந்தைய ஆட்டங்களைப் போல ட்ரா செய்ய விளையாடாமல் இந்த போட்டியில் கேரள அணியை வெற்றி பெற்று புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற முயல்வோம். சென்னை அணி வீரர்கள் நம்பிக்கையுடன் நாளை விளையாடுவார்கள்.

நாளை வெற்றி பெற்றால் அடுத்து வரும் ஆட்டங்கள் சொந்த மைதானத்தில் உள்ளதால் சூப்பர் 4 தகுதிக்கு தங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. அண்டை மாநிலமான கேரளா அணியுடனான போட்டி கவுரவ பிரச்சனையாக கருதி இரு அணிகளும் வெற்றி பெற முனைப்புடன் விளையாடும்' என்றார்.

கோகுலம் கேரள கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் மினோ ஜார்ஜ் கூறும்போது, 'தங்கள் அணி தற்போது 1 வெற்றி, 1 சமன், 7 தோல்வி என 9வது இடத்தில் உள்ளது. இருப்பினும் நாளை நடைபெறும் போட்டியில் சென்னை அணியை வீழ்த்த புது வியூகம் அமைத்துள்ளோம். சென்னை அணிக்கு நெருக்கடி அளிப்போம்.

மேலும், கேரள அணிக்கு விளையாட வேண்டிய சீனியர் வீரர்கள் ஐ.எஸ்.எல் போட்டிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதால் 25 வயதிற்குட்பட்ட இளம் வீரர்களை கொண்டு இந்த போட்டியில் விளையாடி வருகிறோம். இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் கல்லூரி அளவிலான போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளனர். ஒப்பந்தம் செய்யப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் சிலரை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். 

இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தாலும் வரும் போட்டிகளில் வெற்றி பெற்று 5வது இடம் வரை முன்னேற முயல்வோம். ஹீரோ ஐ லீக் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் நேரு உள்விளையாட்டு அரங்க மைதானமும், டெல்லி மைதானமும் சர்வதேச தரத்தில் இல்லை. சென்னை அணி சொந்த மைதானத்தை விட வெளி மாநிலங்களில் சிறப்பாக விளையாடியுள்ளது' என தெரிவித்தார்.

Newsletter