கேப்டவுன் டெஸ்ட் : தோனியின் சாதனையை முறியடித்தார் சகா

ஜனவரி 08

கேப் டவுன் டெஸ்டில் 10 கேட்ச் பிடித்து ஒரே டெஸ்டில் அதிக பேரை வெளியேற்றிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சகா படைத்துள்ளார். 

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஸ்விங் மற்றும் பவுன்சரால் தென்ஆப்ரிக்க பேட்ஸ்மேன் திணறினர். முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 286 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதில், விக்கெட் கீப்பராக விருத்திமான் சகா ஐந்து கேட்ச்கள் பிடித்து தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.

2-வது இன்னிங்சில் பும்ரா, மொகமது ஷமி பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 130 ரன்னில் சுருண்டது. இதிலும், சகா கேட்ச் பிடித்து ஐந்து பேரை வெளியேற்றினார். இதன்மூலம், ஒரே டெஸ்டில் அதிக பேரை அவுட்டாக்கக் காரணமாக இருந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் மகேந்திர சிங் தோனி 2014-ல் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் 9 பேரை அவுட்டாக்கி சாதனைப் படைத்திருந்தார். அதை தற்போது சகா முறியடித்துள்ளார்.

மேலும் 82 பேரை அவுட்டாக்கி இந்திய விக்கெட் கீப்பர் வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்த பரூக் என்ஜீனியர் சாதனையையும் முறியடித்துள்ளார். தோனி சாதனையை முறியடித்ததுடன் தென்ஆப்பிரிக்காவின் டேவிட் ரிச்சர்ட்சன், மார்க் பவுச்சர் சாதனையை சமன் செய்துள்ளார். 

Newsletter