இந்தியாவுக்கு 208 ரன்கள் இலக்கு: 2-வது இன்னிங்ஸில் 130 ரன்களுக்குச் சுருண்டது தெ.ஆப்ரிக்கா

கேப்டவுன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 130 ரன்களுக்குச் சுருண்டது. இதனால், இந்திய அணியின் வெற்றி இலக்கு 208 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 08

கேப்டவுன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 130 ரன்களுக்குச் சுருண்டது. இதனால், இந்திய அணியின் வெற்றி இலக்கு 208 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 286 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி, பாண்டியா மட்டும் கைகொடுக்க 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 2-ஆவது இன்னிங்சைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 2-ம் நாள் முடிவில் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. 

3-ஆவது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களைத் திணறவைத்தனர். முதலில் ஆம்லா 4 ரன்களில் ஷமி பந்துவீச்சில் அவுட் ஆனார். பிறகு ஷமி, ரபடாவை 5 ரன்களில் வெளியேற்றினார். இதன்பிறகு, பூம்ரா தன் பங்கிற்கு, டுபிளெஸ்ஸிஸ் (0), குயின் டி காக் (8 ரன்கள்) ஆகியோரை அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற்றினார். அடுத்ததாக பிளாண்டர் ஷமி பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால், அந்த 95 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதன்பிறகு ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸும், மகாராஜாவும் கொஞ்சம் ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை புவனேஸ்வர் குமார் பிரித்தார். மஹாராஜாவை 15 ரன்களுக்கு வீழ்த்தினார். பிறகு அடுத்த ஓவரில் மார்கலையும் 2 ரன்களில் வெளியேற்றி அசத்தினார் புவனேஸ்வர் குமார். கடைசியாகக் களத்தில் இருந்த டி வில்லியர்ஸ் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து பூம்ரா பந்துவீச்சில் 35 ரன்களுடன் வெளியேறினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 41.2 ஓவர்களில் 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியத் தரப்பில் ஷமி, பூம்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார், பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இன்னும், ஒன்றரை நாட்கள் எஞ்சியிருப்பதால், விக்கெட்டுக்களை இழக்காமல் இந்திய அணி விளையாடினால் இந்தப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறும்.

Newsletter