சிட்னி டெஸ்டில் கவாஜா சதத்தால் ஆஸி., ஆதிக்கம் : மார்ஷ் சகோதரர்கள் சிறப்பான ஆட்டம்

ஜனவரி 06

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் கவாஜாவின் அதிரடி சதத்தால், ஆஸ்திரேலிய அணி மளமளவென ரன் குவித்துள்ளது. 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் அலஸ்டைர் குக் 39 ரன்களும், ஸ்டோன்மேன் 24 ரன்களும் எடுத்தனர். வின்ஸ் 25 ரன்னில் வெளியேறினார். 4-வது விக்கெட் ஜோடியான ஜோ ரூட்- தாவித் மலன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஜோ ரூட் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். முதல் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து 81.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. தாவித் மலன் 55 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய மலன் 62 ரன்கள் குவித்தார். மொயின் அலி (30), குரன் (39), பிராட் (31) ஓரளவுக்கு ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 346 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், ஹசில்வுட் தலா 2 விக்கெட்டுகளும், லியான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சைத் தொடங்கியது. துவக்க வீரர் பான்கிராப்ட் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால், அதன்பின்னர் இணைந்த வார்னர். கவாஜா ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. அரை சதம் கடந்த வார்னர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இதேபோல, அரை சதம் கடந்த கவாஜாவும் சதத்தை நோக்கி நெருங்கினார். மறுமுனையில் கேப்டன் ஸ்மித்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால், 2-ம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 91 ரன்களுடனும், ஸ்மித் 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தை தொடங்கிய இருவரும், ரன் குவிப்பில் ஈடுபட்டனர். டெஸ்ட் அரங்கில் தனது 23-வது அரைசதத்தைப் பதிவு செய்த ஸ்மித் 83 ரன்கள் குவித்த நிலையில், மொயின்கான் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, கவாஜாவுடன் ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். டெஸ்ட் அரங்கில் தனது 6-வது சதத்தை கவாஜா பதிவு செய்தார். அவர் 171 ரன்கள் எடுத்திருந்த போது, கிரேன் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, ஷான் மார்ஷுடன், மிட்சல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் சகோதரர்கள் மேற்கொண்டு விக்கெட்டுக்களை விழ விடாமல், ரன் குவித்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 479 ரன்கள் எடுத்திருந்த போது, ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ஷான் மார்ஷ் 98 ரன்னிலும், மிட்சல் மார்ஷ் 63 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், ஆண்டர்சன், பிராடு, மொயின் அலி, கிரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

Newsletter