ஐபிஎல் அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் விபரம் வெளியீடு : சென்னை அணியில் மீண்டும் தோனி, ரெய்னா !

ஜனவரி 04

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகள், கடந்த சீசன்களில் விளையாடிய குறிப்பிட்ட வீரர்களை மட்டும் தக்க வைத்துள்ளது. எஞ்சிய வீரர்களை, வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் ஏலத்தில் தேர்வு செய்கின்றன. 

சூதாட்டப் புகார் தொடர்பாக கடந்த 2015ல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதனால் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி பங்கேற்கவில்லை. இந்தத் தடை மே மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை அணி, தோனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரெய்னாவை தக்க வைத்துள்ளது. 

சென்னை அணியைப் போலவே, 2 ஆண்டு தடைகாலத்திற்கு பிறகு களமிறங்கும் ராஜேஸ்தான் அணி ஆஸ்ரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை மட்டும் தக்க வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வார்னர், புவனேஸ்வர்குமாரையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோலி, டிவில்லியர்ஸ், சர்பிராஷ்கான் ஆகியோரை ஏலத்திற்கு விடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் கம்பீர் கழற்றிவிடப்பட்டார். ஆண்ட்ரூ ரூசல், சுனில் நரைன் ஆகியோரைத் தக்க வைத்துக் கொண்டது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கடந்த சீசன்களில் அதிரடி ஆட்டக்காரராக இருந்த மேக்ஸ்வெலை அந்த அணி ஏலத்தில் விட்டுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேலைத் தக்க வைத்தது. இதேபோல, ப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தவித்து வரும் டெல்லி டேர்டெவில் அணி, ரிஷப் பண்ட், கிரிஸ் மோரிஸ், ஸ்ரேயாஷ் ஐயர் ஆகியோரைத் தக்க வைத்தது. நடப்பு சாம்பியனான மும்பை அணி, கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா, டெத் பவுலர் பும்ரா ஆகியோரை அணியிலே வைத்துக் கொண்டது. 

ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் தக்கவைக்கலாம் என பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது. 11ஆவது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 27, 28ஆகிய தேதிகளில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter