தோனி மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி: 26 வயது வீரரை விட சிறப்பாக செயல்படும் தோனி -ரவிசாஸ்திரி

டிசம்பர் 25

இந்திய அணியின் அனுபவ வீரரான தோனி, தற்போது முழு ஃபார்மில் இருப்பதாகவும், 26 வயதுடைய வீரரை விடச் சிறப்பாக விளையாடுவதாகவும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கிரிக்கெட் உலகில் சிலர், தோனி ஓய்வு பெறவேண்டும் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் தோனி உண்மையாகவே சரியான உடல் தகுதியோடுதான் இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பி வந்தனர். முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லக்ஷ்மண், அகர்கர், சேவாக் என பலர் தோனிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் அளித்து உள்ளார்.

முதலில் அவர் 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது சந்தேகமாக இருந்தது. தற்போது, அவர் விளையாடுவது மட்டும் உறுதியாகி உள்ளது.

தோனி குறித்து ரவி சாஸ்திரி பேசும் போது, தோனிக்கு அணியில் மாற்று இல்லை. 36 வயது நிரம்பி இருக்கும் அவர், 26 வயது வீரரை விட சிறப்பாக விளையாடக் கூடியவர். இப்போதுதான் அவர் முழு ஃபார்மில் இருக்கிறார். ஒருநாள் போட்டியில் தற்போது மிகவும் சிறப்பாக தோனி விளையாடிக் கொண்டு இருக்கிறார். 36 வயதில் யாருமே இவ்வளவு உடல்தகுதியோடு இருந்ததில்லை. அவரை விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள், தாங்கள் 36 வயதில் எப்படி இருந்தோம் என்று யோசிக்க வேண்டும்.

மற்ற வீரர்கள் அணியின் 2 ரன்கள் ஓடினால், அதே நேரத்தில் தோனி மூன்று ரன்கள் ஓடுகிறார். அவருக்கு மாற்றான ஒரு விக்கெட் கீப்பர் இன்னும் அணியில் இல்லை. தோனியிடம் இருக்கும் திறமை மிகவும் அரிதானது. எளிதில் அப்படி ஒருவரைப் பார்க்க முடியாது. இவ்வாறு கூறியுள்ளார்.

பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் இந்தக் கருத்தின் மூலம், தோனி மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter