பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி : தொடரை 3-0 எனக் கைப்பற்றியது

டிசம்பர் 18

பெர்த்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேன், அடிலெய்டில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டி பெர்த் மைதானம் கடந்த 14-ந்தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 403 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 662 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் 259 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 14 ரன்னிலும், ஸ்டோன்மேன் 3 ரன்னிலும், ஜோ ரூட் 14 ரன்னிலும் ஆட்டமிழக்க நேற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. தாவித் மலன் 28 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. மழைக்காரணமாக காலையில் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் பேர்ஸ்டோவ் நேற்றைய 14 ரன்னுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி 11 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 22 ரன்னிலும், ஓவர்டன் 12 ரன்னிலும், பிராட் ரன் ஏதும் எடுக்காமலும், தாவித் மலன் 54 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்க இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்டது.

இதனால், ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் 26-ந்தேதி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் ஆக நடக்கிறது.

Newsletter