மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் முதன்முறையாக வெற்றியை ருசித்த ஆர்.எஸ்.புரம் அணி

கோவை, டிசம்பர் 18

கோவை, ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள ரத்தின சபாபதி கிளப் சார்பில் வருடம் தோறும் மாநில அளவிலான பூப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மகிழ் மன்றம் சார்பில் நடத்தப்படும் போட்டியின் 25ம் ஆண்டில் முதல் வெற்றியை ஆர்.எஸ்.புரம் பூப்பந்து கழக அணி பெற்றுள்ளது.



ஆர்.எஸ்.புரம் பூப்பந்து கழக அணி சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் கோவை, திருப்பூர், காஞ்சிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 11 அணிகள் பங்குபெற்ன. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுக்களாக நடைபெற்ற இதில் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக அணியும், சென்னையில் உள்ள திருவொற்றியூர் கிளப் அணியும் மோதியது.

இதில் எஸ்.ஆர்.எம் அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தையும், திருவொற்றியூர் கிளப் அணி நான்காம் இடத்தையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் கோவையைச் சேர்ந்த ஆர்.எஸ்.புரம் கிளப் அணியும், திருப்பூரைச் சேர்ந்த ஹிமாலய ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின.

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளுக்கும் இடையே கடும்போட்டி நிலவி வந்தது. இதில் முதல் சுற்றில் 35- 32 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை அணி முன்னிலை பெற்றது. இரண்டாவது சுற்றிலும் 37- 35 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று ஆர்.எஸ்.புரம் கிளப் அணி கோப்பையை தட்டிச் சென்றது.

முதல் இடம் பெற்ற அணிக்கு 16,000 ரூபாய் பரிசுத் தொகை மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூ.12,000, மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

Newsletter