ஸ்மித் இரட்டை சதமடித்து அபாரம் : பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 554 ரன்கள் குவிப்பு

டிசம்பர் 16

கேப்டன் ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 549 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 403 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 2--வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 92 ரன்னுடனும், ஷேன் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு டெஸ்டில் 22-வது சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஷேன் மார்ஷ் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணி 7 பந்து வீச்சாளர்களைப் பயன்டுத்தியும்,  எந்தப் பலனும் இல்லை. இதனால், ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் தனது சொந்த மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில், கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் அடித்தார். ஸ்மித்தின் இரட்டை சதத்தாலும், மிட்செல் மார்ஷின் சதத்தாலும் 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 549 ரன்கள் குவித்தது. ஸ்மித் 229 ரன்னுடனும், மிட்செல் மார்ஷ் 181 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை ஆஸ்திரேலியா 145 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதிவேகமாக விளையாடி 350 ரன்களுக்கு மேல் முன்னிலை வகித்தால் இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Newsletter