3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் சூதாட்டம்..? - இந்திய சூதாட்ட கும்பலுக்கு தொடர்பிருப்பதாகத் தகவல்

டிசம்பர் 14

பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், இந்திய சூதாட்ட கும்பலுக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆஷஸ் தொடரில் கவுரவத்துக்காக எதையும் இழக்கத் தயார் என்கிற ரீதியில் இரு அணிகளும் களத்தில் ஆக்ரோஷமாக விளையாடுகின்ற போட்டியாகவே கருதப்படுகின்றது. இதனால், இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.

70 ஆவது முறையாக ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து செய்தித்தாள் கூறி உள்ளது. போட்டிக்கு முன் இந்த ஓவரில் இத்தனை ரன் அடிக்க வேண்டும், அனைத்து ஓவர்களிலும் பெட் கட்ட வேண்டும் என ஒருவர் தரகரிடம் பேசியதாக ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளது.

அந்த வீடியோவில், மேட்ச் பிக்சிங்கிற்காக ரூ.96 லட்சம் செலவிட மதிப்பிடப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு 20 ஓவர் போட்டியில் "நான்கு முதல் ஐந்து" பிக்பாஸ் லீக் போட்டிகளில் மேட்ச்பிக்சிங் அரங்கேறியது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சூதாட்டத்தை இந்தியாவைச் சேர்த்த சூதாட்ட நபர்களான சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா ஆகியோர் செய்ய இருக்கின்றனர். இவர்களுக்கும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் சில கிரிக்கெட் வீரர்களை விலைக்கு வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. 

சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா இருவரும் இந்திய சூதாட்ட உலகில் மிகவும் முக்கியமான நபர்கள் ஆவர். மேலும், இதில் சோபர் ஜோபன் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். தற்போது, இவர்கள்தான் இந்தச் சூதாட்டம் குறித்து பத்திரிக்கைக்கு தெரிவித்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் அந்தப் பத்திரிக்கை நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு உள்ளனர். மேலும், இவர்களுக்குப் பின் இந்தியாவில் சில தொழில் அதிபர்களும், ஆஸ்திரேலியாவில் சில பண முதலைகளும் உள்ளனர்.

இந்தச் சூதாட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கும் வீரர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என இரண்டு அணியிலும் சில வீரர்கள் இதற்கு ஒப்புக் கொண்டதாக சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 110 சதவிகிதம் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது, இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Newsletter