இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தக்க பதிலடி கொடுத்த இந்தியா: 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


டிசம்பர் 14

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்தது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இந்திய அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தது. கேப்டன் ரோகித் ஷர்மா இரட்டை சதம் அடித்து, சாதனை படைத்து இந்தியாவிற்கு பலம் சேர்த்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 392 ரன்கள் எடுத்து இருந்தது.

இலங்கை அணிக்கு 393 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனையடுத்து பேட்டிங் தொடங்கி விளையாடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்கார்களை, இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் நின்று விளையாட விடவில்லை. விக்கெட்களை இழந்த இலங்கை அணிக்கு மேத்யூஸ் மட்டும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேத்யூஸ் சதம் கடந்து கடைசி வரையில் நிலைத்து நின்றார். இலங்கை அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 251 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டு உள்ளது.

Newsletter