2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக சண்டிகர் வந்தடைந்த இந்திய வீரர்கள்

டிசம்பர் 11

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் 13-ம் தேதி மொகாலியில் நடைபெற உள்ளது. இதற்காக, இந்திய கிரிக்கெட் அணியினர் சண்டிகருக்கு வந்தடைந்தனர்.  

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முன்னாள் கேப்டன் தோனியைத் தவிர அனைவரும் சோபிக்கத் தவறினர். இதனால், இந்திய அணி 112 ரன்னுக்கு சுருண்டது. தொடர்ந்து, விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கியுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் 13-ம் தேதி மொகாலியில் நடக்கிறது. இதற்காக, இந்திய கிரிக்கெட் அணியினர் சண்டிகருக்கு வந்தடைந்தனர். பெரரா தலைமையிலான இலங்கை அணி, தர்மசாலா போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடியது. எனவே, அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், பதிலடி அளிக்கும் முனைப்பிலும் இந்திய வீரர்கள் அடுத்தப் போட்டியில் களம்காணுவார்கள். இதேபோல, 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை இழந்ததற்கு, ஒருநாள் தொடரைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முடிவில் இலங்கை உள்ளனர். எனவே, இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.  

Newsletter