உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: அரையிறுதியில் இந்திய அணி தோல்வி

டிசம்பர் 09

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது.

ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - அர்ஜெண்டினா அணிகள் மோதின.

இப்போட்டியின் 17-வது நிமிட ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் கொன்சாலோ பெய்லாட் கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது. இதையடுத்து, இந்திய அணியினர் கோல் அடிக்க கடினமாக முயன்றனர். இருப்பினும், இந்திய அணியினரின் முயற்சிகளை அர்ஜெண்டினா வீரர்கள் திறமையாக தடுத்தனர்.

அதே நேரத்தில் இந்திய வீரர்களும் அர்ஜெண்டினா வீரர்களை கோல் அடிக்கவிடாமல் தடுத்தனர். இதனால், இறுதிவரை மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இறுதியில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முன்னதாக, நடந்த 7-வது மற்றும் 8-வது இடங்களுக்கான போட்டியில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் 42-வது நிமிடம் நெதர்லாந்தின் மிர்கோ ப்ரூய்ஜ்சர் கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் அதுவே வெற்றி கோலாக அமைந்தது. இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நெதர்லாந்து 7-வது இடத்தை பிடித்தது.

இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. 5-வது மற்றும் 6-வது இடத்திற்கான போட்டியில் பெல்ஜியம், ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 

Newsletter