இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் நாளை மறுநாள் தொடக்கம்: இந்தியா முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்பு

டிசம்பர் 8

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை முழுமையாக (3-0) கைப்பற்றினால் ஒருநாள் போட்டித் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க இந்திய அணிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்து இந்தியா - இலங்கை அணிகள் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல்போட்டி வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தர்மசாலாவில் நடக்கிறது. 2-வது ஆட்டம் 13-ந் தேதி மொகாலியிலும், 3-வது ஆட்டம் 17-ந் தேதி விசாகப்பட்டினத்திலும் நடக்கிறது.

ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்கா, இந்தியா தலா 120 புள்ளிகளுடன் உள்ளன. தசம புள்ளிகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்தியா 2-வது இடத்தில் உள்ளன. இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா முழுமையாக (3-0) கைப்பற்றினால் 121 புள்ளிகள் பெற்று ஒருநாள் போட்டி தரவரிசையில் அது முதலிடத்தைப் பிடிக்கும்.

மாறாக, இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றினால் ஒரு புள்ளி குறைந்து 119 புள்ளிகளுடன் இருந்தும், தொடரில் ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தாலோ இந்தியா 2-வது இடத்திலேயே நீடிக்கும். தொடரை இழந்தாலும் இந்தியாவுக்குப் பாதிப்பு ஏற்படாது. 2-வது இடத்திலேயே நீடிக்கும்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் கேப்டன் வீராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. தற்காலிக கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டு உள்ளார்.

Newsletter