சமனில் முடிந்தது டெல்லி டெஸ்ட் போட்டி : 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா

டிசம்பர் 6

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது. 

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்திருந்த போது, காற்று மாசு பிரச்சனையை இலங்கை அணியினர் கையில் எடுத்ததால் ஏற்பட்ட சர்ச்சையால் டிக்ளேர் செய்தது. பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி மேத்யூஸ், சண்டிமால் ஆகியோரின் சதத்தின் உதவியால், 373 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து, 163 ரன்கள் முன்னிலையுடன், 2-வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்சில் இரட்டைச் சதம் அடித்து அசத்திய கேப்டன் விராட் கோலி, 2-வது இன்னிங்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் (67 ரன்கள்), விராட் கோலி (50 ரன்கள்), ரோகித் ஷர்மா (50 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து இருந்த போது, டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இலங்கை அணிக்கு 410 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இமாலய இலக்கை நோக்கி, தங்களது 2-வது இன்னிங்சை துவங்கிய இலங்கை அணி, இன்று 31 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களான கருணா ரத்னே (13 ரன்கள்), சமரவிக்ரமா (5 ரன்கள்) லக்மல்(0) ஆகியோர் வரிசையாய் பெவிலியன் திரும்பினர். டி சில்வா 13 ரன்களுடனும், மேத்யூஸ் ரன் எதுவும் இன்றியும் களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில், போட்டியைச் சமன் செய்யும் முனைப்பில் கடைசி நாள் ஆட்டத்தை இலங்கை வீரர்கள் தொடர்ந்தனர். ஆனால், மேற்கொண்டு இலங்கை அணி 4 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில், மேத்யூஸ் (1) ஜடேஜாவின் சுழலில் சிக்கினார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சண்டிமால், டி சில்வாவுடன் இணைந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இருவரும் போட்டியை சமன் செய்தே ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன் விளையாடினர். ஒருகட்டத்தில் சண்டிமால் 36 ரன்னில் அஸ்வின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.  

பின்னர்,  டி சில்வாவுடன், ரோஷன் சில்வா இணைந்து நிதானமாக ஆடினர். மறுமுனையில், சிறப்பாக ஆடிய டிசில்வா சதம் விளாசினார். 119 ரன்கள் சேர்த்த நிலையில், அவர் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.  தொடர்ந்து, டிக்வெல்லா, ரோஷன் சில்வாவுடன் இணைந்து போட்டியை சமனை நோக்கி எடுத்துச் சென்றனர். மொத்தம் 103 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், 5-ம் நாள் ஆட்டநேர முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால், ஆட்டம் சமன் அடைந்தது. இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. ரோஷன் சில்வா 74 ரன்னுடனும், டிக்வெல்லா 44 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும்,  சமி, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதன்மூலம், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு வழங்கப்பட்டது. 

Newsletter