இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றி

டிசம்பர் 06

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. 215 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 138 ரன்னில் சுருண்டதால் இங்கிலாந்துக்கு 354 ரன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து இருந்தது. 

இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மேலும் 178 ரன்கள் தேவைப்பட்டது. இந்தச் சூழலில், மாலன், மொயின் அலி ஆகியோர் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆஸ்திரேலியா வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சில் இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. குறிப்பாக, ஸ்டார்க் பந்துவீச்சில் நிலை குலைந்த அந்த அணி 233 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மாலன் (19), மொயின் அலி (25), பேர்ஸ்டோவ் (21), வோக்ஸ் (36),  ஸ்டூவர் பிராட் (3), ஆண்டர்சன் (0) அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். 

இதன் மூலம் 120 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. லியான் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் இரு விக்கெட்டுகளும், ஹசில்வுட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Newsletter