பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள ஆஷஸ் டெஸ்ட் - கடைசி நாளில் 6 விக்கெட் மீதமுள்ள நிலையில் 178 ரன்கள் எடுத்தால் இங்., வெற்றி

டிசம்பர் 05

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,  6 விக்கெட் மீதமுள்ள நிலையில் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து உள்ளதால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் அடிலெய்டில் 2-வது டெஸ்ட் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா ஷேன் மார்ஷின் அபார சதத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 442 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நாதன் லயனின் சுழலில் சிக்கி 227 ரன்னில் சுருண்டது. நாதன் லயன் 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 215 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 200 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றால் பாலோ-ஆன் மூலம் இங்கிலாந்தை மீண்டும் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய வைக்கலாம். ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பாலோ-ஆன் கேட்காததால், ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடிது. 

இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டம் இழந்தனர். பான் கிராஃப்ட் (4), வார்னர் (14), கவாஜா (20), ஸ்மித் (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது.  ஹெண்ட்ஸ்காம்ப், நாதன் லயன் தலா 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆண்டர்சன் பந்தில் அனல் பறந்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 12 ரன்கள் எடுத்த நிலையிலும், நாதன் லயன் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த மார்ஷ் 19 ரன்னிலும், பெய்ன் 20 ரன்னிலும், ஸ்டார்க் 20 ரன்னிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 58 ஓவர்கள் மட்டுமே விளையாடி 138 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன் 5 விக்கெட்டும், வோக்ஸ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 215 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் 2-வது இன்னிங்ஸ் ஸ்கோருடன் சேர்த்து ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாக 353 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால், 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர்.  குக் நிதானமாக விளையாட, ஸ்டோன்மேன் நம்பிக்கையுடன் அதிரடியாக விளையாடி வந்தார். இதனால் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை தொட்டது. குக் 16 ரன்னிலும், ஸ்டோன்மேன் 36 ரன்னிலும், வின்ஸ் 15 ரன்னிலும் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். கேப்டன் ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு மலன் துணையாக நின்றார். ஜோ ரூட் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடிவடையச் சிறிது நேரம் மட்டுமே இருக்கையில் மலன் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இதனால், இங்கிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 67 ரன்னுடனும், கிறிஸ் வோக்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 178 ரன்கள் வேண்டும். கைவசம் 6 விக்கெட்டுக்கள் உள்ளன.

ஜோ ரூட் 67 ரன்னுடனும் உள்ளார். இவர் நாளைக் காலை ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்து விளையாடிவிட்டால் இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்புள்ளது. இன்னும் மொயின் அலி, பேர்ஸ்டோவ் உள்ளனர். அதேவேளையில், ஸ்டார்க் நாளைத் தொடக்கத்தில் விக்கெட்டுக்களை கைப்பற்றினால் ஆஸ்திரேலியாவிற்கு வாய்ப்பு உள்ளது. இரு அணிக்கும்  வாய்ப்பு உள்ளதால் அடிலெய்டு டெஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter