3-வது டெஸ்ட் : 410 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா - 3 விக்., இழந்து இலங்கை திணறல்

டிசம்பர் 05

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 410 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்திருந்த போது, காற்று மாசு பிரச்சனையை இலங்கை அணியினர் கையில் எடுத்ததால் ஏற்பட்ட சர்ச்சையால் இந்தியா  டிக்ளேர் செய்தது. பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி மேத்யூஸ், சண்டிமால் ஆகியோரின் சதத்தின் உதவியால், 373 ரன்கள்  குவித்தது. 

இதையடுத்து, 163 ரன்கள் முன்னிலையுடன், 2-வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்சில் இரட்டைச் சதம் அடித்து அசத்திய கேப்டன் விராட் கோலி, 2-வது இன்னிங்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் (67 ரன்கள்), விராட் கோலி (50 ரன்கள்), ரோகித் ஷர்மா (50 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து இருந்த போது, டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இலங்கை அணிக்கு 410 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இமாலய இலக்கை நோக்கி, தங்களது 2-வது இன்னிங்சை துவங்கிய இலங்கை அணி, இன்று 31 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களான கருணா ரத்னே (13 ரன்கள்), சமரவிக்ரமா (5 ரன்கள்) லக்மல்(0) ஆகியோர் வரிசையாய் பெவிலியன் திரும்பினர். டி சில்வா 13 ரன்களுடனும், மேத்யூஸ் ரன் எதுவும் இன்றியும் களத்தில் உள்ளனர். 

நாளை ஒருநாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இலங்கை அணி வெற்றி பெற 379 ரன்கள் தேவையுள்ளது. இதனால், இலங்கை அணி டிரா செய்யவே போராடும். இருப்பினும், இந்த ஆட்டத்தில், இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

Newsletter