இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் கோலி, விஜயின் சதங்களால் இந்திய ரன் குவிப்பு

டிசம்பர் 2

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முரளி விஜய், விராட் கோலி ஆகியோரின் சதங்களால் , முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா - இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் முரளி விஜய், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். அணியின் ஸ்கோர் 42 ரன்னாக இருக்கும்போது, தவான் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த புஜாராவும் 23 ரன்களில் வெளியேறினார்.

புஜாரா அவுட்டாகும்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின், முரளி விஜயுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். முரளி விஜய் 67 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 27 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, முரளி விஜய் 51 ரன்னுடனும், விராட் கோலி 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர், இருவரும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய முரளி விஜய் 163 பந்தில் 9 பவுண்டரியுடன் சதம் அடித்தார். நாக்பூர் டெஸ்டிலும் முரளி விஜய் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தேநீர் இடைவேளை வரை 57 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 101 ரன்னுடனும், விராட் கோலி 94 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தேநீர் இடைவேளை முடிந்ததும், விராட் கோலி சதம் அடித்தார். அவர் 110 பந்தில் 14 பவுண்டரியுடன் இந்தச் சதத்தை அடித்தார். இது அவரின் 20-வது சதம் ஆகும். பின்னர், 155 ரன்கள் குவித்த முரளி விஜய், சண்டேகன் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, வந்த ரகானே ஒரு ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 156 ரன்னுடனும், ரோகித் சர்மா 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

Newsletter