இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : கோலிக்கு ஓய்வு, ரோகித் சர்மா கேப்டன்

நவம்பர் 27

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோகித்சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில், ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசிப் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டிசம்பர் 2-ந்தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி டிசம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.

அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி டிசம்பர் 10-ந்தேதியும், 2-வது போட்டி 13-ந்தேதியும், 3-வது போட்டி 16-ந்தேதியும் நடக்கிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் இருந்து தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்வின், ஜடேஜாவிற்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இடம் கிடைக்கவில்லை. சிதார்த் கவுல் முதன்முறையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 15 பேர் கொண்ட வீரர்கள் விவரம்:-  1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. தவான், 3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. மணீஷ் பாண்டே, 6. கேதர் ஜாதவ், 7. தினேஷ் கார்த்திக், 8. தோனி, 9. ஹர்திக் பாண்டியா, 10. அக்சார் பட்டேல், 11. குல்தீப் யாதவ், 12. சாஹல், 13. பும்ரா, 14. புவனேஸ்வர் குமார். 15. சிதார்த் கவுல்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அதே இந்திய அணி 3-வது டெஸ்டிற்கும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter