இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி



நவம்பர் 27

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, இந்திய சுழற்பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 205 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. கேப்டன் விராட் கோலியின் இரட்டை சதத்தாலும், முரளிவிஜய், புஜாரா மற்றும் ரோகித் சர்மாவின் சதத்தாலும் இந்திய அணி இமலாய ஸ்கோரை குவித்தது. 6 விக்கெட்கள் இழப்பிற்கு 610 ரன்கள் எடுத்து இருந்த போது டிக்ளேர் செய்தது. 

இந்திய அணியை விட 405 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டியின் தொடக்க ஓவரின் 2-வது பந்தில் அந்த அணியின் சதீரா ரன் ஏதுவுமின்றி இஷாந்த் சர்மா பந்தில் கிளீன் போல்டானார். இதைத் தொடர்ந்து, மற்றொரு தொடக்க வீரர் கருணாரத்னேவுடன் ஜோடி சேர்ந்த திரிமன்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் விக்கெட்டை இழக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினர். இறுதியில், 6 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், கருணாரத்னே 11 ரன்னுடனும், திரிமன்னே 9 ரன்னுடனும் இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். போட்டித் தொடங்கியது முதலே அஸ்வினும், ஜடேஜாவும் ஒருபுறம் சூழலில் அசத்த, மறுமுனையில், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் வேகத்தில் மிரட்டினர். இதனால், இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் கேப்டன் சண்டிமால் (61) அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் 49.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 166 ரன்களுக்குச் சுருண்டது. 

இதனால், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக இரட்டை சதம் விளாசிய கேப்டன் கோலி தேர்வு செய்யப்பட்டார்.  இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான  மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் வரும் டிசம்பர் 2ல் துவங்குகிறது.

அஸ்வின் உலக சாதனை:

இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 300-வது விக்கெட்டை கைப்பற்றினார்.  இதன்மூலம், குறைந்த டெஸ்ட்களில், அதாவது 54 டெஸ்ட்களில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி, அஸ்வின் உலக சாதனை நிகழ்த்தினார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லி, 56 டெஸ்ட்களில் இந்த சாதனையை செய்து இருந்தார்.

Newsletter