ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா அணி

நவம்பர் 26

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி உள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் முதல் டெஸ்ட் கடந்த 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஸ்டோன்மேன் (53), அடுத்துக் களமிறங்கிய வின்ஸ் (83), 5-வது வீரராகக் களம் இறங்கிய தாவித் மலன் (56) ஆகியோரின் அரைசதங்களால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 302 ரன்கள் சேர்த்தது.

பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, கேப்டன் ஸ்மித்தின் சதம் (ஆட்டமிழக்காமல் 141) மார்ஷ் (51), கம்மின்ஸ் (42) ரன்கள் குவிக்க, 130.3 ஓவரில் 328 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஸ்மித்தின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 26 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

26 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹசில்வுட்டின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து தொடக்க விக்கெட்டுக்களை விரைவில் இழந்தது. அலஸ்டைர் குக் 7 ரன்னிலும், வின்ஸ் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஸ்டோன்மேனுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோன்மேன் 19 ரன்னுடனும், ஜோ ரூட் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், 4-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். அந்த அணியின் வின்சி (83), ஸ்டோன்மென் (53), மாலன் (56) ஆகியோர் மட்டும் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். முடிவில், 116.4 ஓவர்களில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இங்கிலாந்து அணி இழந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுக்களும், லியான் 2 விக்கெட்டுகளையும், ஹசில்வுட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் வார்னர், பான்கிராப்ட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் இன்னிங்சில் சிறப்பான தொடக்கத்தை அளிக்காத இந்த ஜோடி, 2-வது இன்னிங்சில் நேர்த்தியாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 34 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்துள்ளது. பான்கிராப்ட் 51 ரன்னுடனும், வார்னர் 60 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஒருநாள் எஞ்சியுள்ள நிலையில், 56 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற விளிம்பில் ஆஸ்திரேலியா அணி உள்ளது. நாளையும் இந்த ஜோடி சிறப்பாக ஆடும்பட்சத்தில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் கைப்பற்றும். மேலும், 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெறும்.

Newsletter