பார்சிலோனாவுடனான ஒப்பந்தத்தை 2021-ம் ஆண்டு வரை நீட்டித்தார் மெஸ்சி

நவம்பர் 26

கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்சி பார்சிலோனாவுடனான ஒப்பந்தத்தை 2021-ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளார். அவரது டிரான்ஸ்பர் பீஸ் 835 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக திகழும் லயோனல் மெஸ்சி இந்த தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர், ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் ஆன பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். தனது ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த கிளப்பிற்காக மட்டுமே விளையாடி வருகிறார்.

தொடர்ந்து, அணியில் இடம்பிடித்து வந்தாலும் அவரது ஒப்பந்தம் குறிப்பிட்ட காலத்திற்கு வரையறுக்கப்படும். அதன்படி, அடுத்த ஆண்டு சீசனோடு மெஸ்சியின் ஒப்பந்தம் முடிவுக்கு வர இருந்தது. இதனால், கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும். இதனால், ஒப்பந்தத்திற்கு வாருங்கள் என மெஸ்சியை அழைத்தது பா்சிலோனா. ஆனால், மெஸ்சி தனது ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்தார்.

இதனால், பார்சிலோனா உடனான ஒப்பந்தத்தை நீட்டிப்பாரா ? அல்லது அணி மாறுவாரா? என்ற கேள்வி எழுந்து வந்தது. ஒருவேளை மெஸ்சி கையெழுத்திடாமல் இருந்தால் ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

சமீபத்தில், நெய்மர் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறினார். இதனால், மெஸ்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை பார்சிலோனா அணிக்கு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று மெஸ்சி தனது ஒப்பந்தத்தை 2021-ம் ஆண்டு வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டார். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதன்மூலம் 2020-21 சீசன் வரை மெஸ்சி பார்சிலோனா அணிக்காக விளையாடுவார். 13 வயதில் பார்சிலோனா கிளப்பிற்கு வந்த மெஸ்சி, 602 போட்டிகளில் விளையாடி 523 கோல்கள் அடித்துள்ளார்.

நெய்மரை 222 மில்லியன் யூரோ விலைக்கு பார்சிலோனா பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணிக்கு விடுவிக்கும் நிலை ஏற்பட்டது. இதேபோல, மெஸ்சியை எந்த அணியும் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக அவரது டிரான்ஸ்பர் விலையை (buyout clause) 700 மில்லியன் யூரோ  பார்சிலோனா நிர்ணயித்துள்ளது.

Newsletter