நாக்பூர் டெஸ்ட் போட்டி : முரளி விஜய், புஜாரா சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி

நவம்பர் 25

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் முரளி விஜய், புஜாரா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அஸ்வின் (4), இசாந்த் சர்மா (3), ஜடேஜா (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லோகேஷ் ராகுல் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 8 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய், புஜாரா ஆகியோர் தலா 2 ரன்களுடனும களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 19 மற்றும 61 ரன்னில் தப்பிப் பிழைத்த முரளி விஜய் சதம் (128) விளாசி ஆட்டமிழந்தார். தொடர்ந்து, புஜாராவும் 14-வது சதம் விளாசினார். அடுத்து வந்த கோலியும், தன் பங்கிற்கு அரைசதம் அடித்து அசத்தினார். 

2-வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 121 ரன்னுடனும், கோலி 54 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது, 17 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, நாளை அதிரடியாக ஆடி ரன் குவிக்கும் பட்சத்தில், இன்னிங்ஸ் வெற்றிக் கிடைக்க வாய்ப்புள்ளது. 

Newsletter