ஆஷஸ் முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 302 ரன்களில் ஆல் அவுட் - 4 விக்., இழந்து ஆஸி., தடுமாற்றம்

நவம்பர் 24 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 302 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. 

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டயர் குக், மார்க் ஸ்டோன்மான் ஆகியோர் களமிறங்கினர். குக் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஹேன்ட்ஸ்கோம்ப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜேம்ஸ் வின்சி, ஸ்டோன்மான் ஆகியோர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட்டும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து கம்மின்ஸ் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். முதல் நாள் ஆட்டநேர இறுதியில் 80.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. மலான் 28 ரன்களுடனும், மொயின் அலி 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய போது, 83 ரன்கள் சேர்த்த நிலையில் மலானும், மொயின் அலியும் ஆட்டமிழந்தனர். அதன்பின் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதையடுத்து, இங்கிலாந்து அணி 302 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், நாதன் லியான் 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி, 80 ரன் எடுப்பதற்குள் கேம்ரூன் பான்கிராப்ட், உஸ்மன் கவாஜா, டேவிட் வார்னர், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் ஆகியோரது விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. கேப்டன் ஸ்மித், ஷான் மார்ஷ் ஆகியோர் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்மித், தனது 22-வது அரைசதத்தைப் பதிவு செய்தார். 

ஆஸ்திரேலியா அணி 62 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்த போது, 2-ம் நாள் முடித்துக் கொள்ளப்பட்டது. கேப்டன் ஸ்மித் 64 ரன்னுடனும், மார்ஷ் 44 ரன்னுடனும களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மொயின் அலி, ஜேக் பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

Newsletter