கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி போராடி சமன் செய்தது

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது. முதல் இரு நாட்களில் மழையால் கணிசமான ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், அதற்கு மத்தியில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது.  4-வது நாளில் உணவு இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. 

இதையடுத்து 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2–வது இன்னிங்சை தொடங்கியது. 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால், 4–வது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. லோகேஷ் ராகுல் 73 ரன்களுடனும், புஜாரா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா 49 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 5-வது நாள் ஆட்டம் துவங்கியதும்,  லோகேஷ் ராகுல் 79 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களம் புகுந்த விராட் கோலி தொடக்கத்தில் இருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் புஜரா (22 ரன்கள்), ரகானே(0), ஜடேஜா(9), அஷ்வின்(7), சகா(5), புவனேஷ்குமார்(8) ஆகியோர் வரிசையாய் நடையை கட்டினாலும், விராட் கோலி ஒருநாள் போட்டி போல அடித்து ஆடிக்கொண்டு இருந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதம் அடித்து அசத்தினார்.  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் அடித்த 18-வது சதம் இதுவாகும். அப்போது, 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி தனது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. விராட் கோலி 104 ரன்களுடனும், முகம்மது சமி 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இதன்மூலம், இலங்கை அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, பேட் செய்ய துவங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சில் நிலைகுலைந்தது. இதனால், சமன் ஆகும் என்று எதிர்பார்த்த இந்தப் போட்டி பரபரப்பான நிலையை எட்டியது. தோல்வியை தவிர்க்க இலங்கை அணி போராடியது. சமி மற்றும் புவனேஷ்வர்குமார் துல்லிய தாக்குதலால் இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 

ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில், 26.3 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களை இலங்கை அணி எடுத்து இருந்த போது ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால், இந்த போட்டி சமனில் முடிந்தது. இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர்குமாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

Newsletter