சர்வதேச போட்டிகளில் 50-வது சதத்தைப் பதிவு செய்தார் விராட் கோலி

நவம்பர் 20 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சதத்தை விளாசிய வீரர் என்ற புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து பல்வேறு உலக சாதனைகளை அரங்கேற்றி வருகிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆன அவர், அப்போது முதல் அடுத்தடுத்து பல்வேறு புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். 

அந்த வகையில், அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, 32 வது சதத்தை எட்டிய விராட் கோலி, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (49 சதங்கள்) முதலிடத்தில் உள்ளார். 

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில், விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினர். இதன்மூலம், இந்தப் போட்டியில் வலுவான நிலையை இந்திய அணி எட்டியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அடித்த 18-வது சதம் இதுவாகும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி, ஒட்டு மொத்தமாக 50-வது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன்மூலம், விராட் கோலி தனது கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்களின் விவரம் வருமாறு:- 

1. சச்சின் டெண்டுல்கர் -100 சதங்கள் 

2. ரிக்கி பாண்டிங் - 71 சதம் 

3. குமார் சங்கக்காரா - 63 சதம் 

4. கல்லீஸ் - 62 சதம் 

5. ஜெயவர்த்தனே - 54 சதம் 

6. அம்லா - 54 சதங்கள், 

7. பிரயன் லாரா - 53 சதம்

Newsletter