கொல்கத்தா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 172 ரன்னுக்கு சுருண்டது

நவம்பர் 18: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்னுக்கு சுருண்டது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. மழை குறுக்கிட்டதால், போட்டி தாமதமாக தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி, ராகுல், தவான், கோலி ஆகியோரின் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து, 2-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு ரகானே, அஸ்வின் தலா 4 ரன்களில் அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தனர். புஜாரா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ரன்களை குவித்தார். 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் கைவிடப்படப்பட்டது. புஜாரா 47 ரன்களுடனும் சகா 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் 15 நிமிடம் முன்னதாக துவங்கியது. ஹெராத் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய புஜாரா, அரைசதம் எட்டினார். இவர் 52 ரன் எடுத்த நிலையில், கமாகே பந்தில் போல்டானார். ஜடேஜா (22), சகா (29), புவனேஷ்வர் குமார் (13) சற்று உதவினர். கடைசியில் ஷமி (24) அவுட்டாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு சுருண்டது.

இதைத் தொடர்ந்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

Newsletter