கொல்கத்தா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு

நவம்பர் 17

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டமும், மழை குறுக்கிட்டதால், பாதியில் நிறுத்த பட்டது. 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. எதிர்பார்த்தது போலவே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மழை மற்றும் ஈரப்பதமான மைதானம் காரணமாக 3½ மணி நேரம் பாதிப்புக்கு பிறகு பிற்பகலில் தான் ‘டாஸ்’ போடப்பட்டது. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், மேகமூட்டமான வானிலையை கருத்தில் கொண்டு தயக்கமின்றி பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. சுரங்கா லக்மல் வீசிய போட்டியின் முதல் பந்திலேயே லோகேஷ் ராகுல் (0) விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானும் (8 ரன்) நிலைக்கவில்லை. லக்மல் வீசிய பந்தை எதிர்கொண்ட போது பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பையும் பதம் பார்த்தது. கேப்டன் விராட் கோலியும் ரன் எதுவும் இன்றி வெளியேறினார். 

மோசமான தொடக்கம் கண்ட இந்திய அணி முதல் இன்னிங்சில் 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 17 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, மழையும் பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. புஜாரா (8 ரன்), ரஹானே (0) களத்தில் இருந்தனர். இந்த நிலையில், 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும், நேற்றைய நிலையே நீடித்தது. ரகானே, அஸ்வின் தலா 4 ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினார். 

புஜாரா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி வருகிறார். இந்திய அணி 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. புஜாரா 47 ரன்களுடனும் சகா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Newsletter