ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் தங்கம் வென்று அசத்தல்

நவம்பர் 8: வியட்நாமில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம், தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் வியட்நாமின் ஹோசிமின்ஹ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் எதிராளிகளை துவம்சம் செய்து தொடர்ந்து முன்னேறினார். அரையிறுதி போட்டியில் ஜப்பானின் டிசுபாசா கோமுராவை வீழ்த்திய மேரி கோம், இன்று (நவம்.,8) நடைபெற்ற இறுதிப்போட்டியில் வடகொரியாவின் கிம் ஹியாங் மியை எதிர்கொண்டார்.

முதல் சுற்றில் இருந்தே இருவரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு முன்னிலை பெறும் முனைப்புடன் களமிறங்கினர். முதல் சுற்றில் மேரிகோமுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கிம் சுதாரிக்கத் தவறினார். அத்துடன் சில குத்துக்களையும் வாங்கியதால் சரிவு ஏற்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திய மேரி கோம், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் முதல் முறையாக ஆசிய போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவில் அவர் தங்கம் வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக ஆசிய போட்டியில் அவர் 5-வது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

Newsletter