சர்வதேச போட்டிகளில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றார் நெஹரா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் நெஹரா ஓய்வு பெற்றார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் 38 வயதான ஆஷிஷ் நெஹரா சொந்த ஊர் ரசிகர்கள், உறவினர்களின் முன்னிலையில் வெற்றியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். நேற்றைய ஆட்டத்தில் முதலாவது ஓவரையும், கடைசி ஓவரையும் வீசும் கவுரவத்தை பெற்ற நெஹராவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை. அவரது பந்து வீச்சில் காலின் முன்ரோ கொடுத்த கேட்ச் வாய்ப்பை பாண்ட்யா வீணடித்து விட்டார். அவர் பந்து வீச வந்த போதெல்லாம் ரசிகர்கள் பதாகைகளை காட்டியும், கரகோஷம் எழுப்பியும் ஊக்கப்படுத்தினர். ஆட்டம் முடிந்ததும் மைதானத்தை வலம் வந்த நெஹராவை, சக வீரர்களும், சக மாநில வீரர்களுமான (டெல்லி) விராட் கோலியும், ஷிகர் தவானும் சிறிது நேரம் தோளில் தூக்கி சுமந்தனர். அதன் பிறகு அனைவரும் உற்சாகமாக குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

1999-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த நெஹரா இதுவரை 27 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இது தவிர 17 டெஸ்ட், 120 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்று இருக்கிறார். முன்னதாக அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நினைவுப்பரிசை கோலியும், டோனியும் வழங்கினர். டெல்லி கோட்லா மைதானத்தில் பந்து வீசும் பகுதியில் ஒரு முனைக்கு நெஹராவின் பெயரை சூட்டி டெல்லி கிரிக்கெட் சங்கம் அவரை கவுரவப்படுத்தியுள்ளது.

Newsletter