நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி; 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்தை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1–2 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

அதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோகித் சர்மா கூட்டணியை நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியவில்லை. இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். அவர்களது பந்துகளை சிக்சர், பவுண்டரி என சிதறடித்தனர்.

இந்திய அணி 16.2 வது ஓவரில் 158 ரன்களை எடுத்து இருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 80 ரன்களில் (52 பந்துக்கள், 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அவுட் ஆனார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.

இதனையடுத்து,ரோகித் சர்மாவுடன், கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். கோலியும் இரண்டு சிக்சர்களை விளாசினார். மறுமுனையில் சதம் நோக்கி விளையாடிய ரோகித் சர்மாவும் 80 ரன்களில் அவுட் ஆனார்.  55 பந்துக்களை எதிர்க்கொண்ட அவர், 6 பவுண்டர்கள் மற்றும் 4 சிக்சர்களை அடித்து அசத்தினார். விராட் கோலியுடன் கை கோர்த்த டோனியும் சிக்சருடன் ஆட்டத்தை தொடங்கினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கப்தில் மற்றும் முன்ரோ ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறினர்.

இதனையடுத்து ஆட வந்த கேப்டன் வில்லியம்சன் சிறிது நிலைத்து நின்று ஆட, ஹர்திக் பாண்டியா பிடித்த அருமையான கேட்ச் ஒன்றில் ஆட்டமிழந்தார். பின்னர் களத்திற்கு வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தனர். 

இறுதியில், அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் சஹல், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ததுடன், தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Newsletter