தேசிய செஸ் போட்டியில் கோவை மாணவி சாம்பியன்

கோவை, நவம்பர் 1: குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான செஸ் போட்டியில் கோவையைச் சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 



குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் டாக்டர் என்.மகாலிங்கம் 28-வது தேசிய செஸ் போட்டி கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை நகரில் தேசிய செஸ் போட்டி நடத்தப்பட்டது. 21 மாநிலங்களில் இருந்து 170 போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் முதல் இரண்டு இடம் பிடித்த செஸ் வீரர்கள் 2018 ஆம் ஆண்டில் உலக செஸ் சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 9 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவம்.,1) நடைபெற்றது. முதல் 20 வீரர், வீராங்கனைக்கு ரூ. 2.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மாணவர் பிரிவில் தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜா ரித்வி வெற்றி பெற்றார். சக மாநிலத்தைச் சேர்ந்த எரிகாசி அர்ஜூன் 2-வது இடத்தையும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மித்திர்பா குஹா மூன்றாம் பரிசையும் வென்றனர்.



மாணவிகள் பிரிவில் கோவையைச் சேர்ந்த மாணவி பிரியங்கா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அர்பிதா முகர்ஜி, சண்டிகரைச் சேர்ந்த தரினி கோயல் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசை வென்றனர்.

Newsletter