நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 தொடரை கைப்பற்றியது.

கான்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக தவான் - ரோகித் சர்மா களமிறங்கினர். தவான் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த கோலி - ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக ஆடினர். இவர்களது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் மளமளவென உயர்ந்தது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 147 ரன்களும், கோலி 113 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் சவுத்தி, சான்ட்னர், ஆடம் மில்னி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக குப்தில் - கோலின் மன்றோ களமிறங்கினர். குப்தில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வில்லியம்சன் - கோலின் மன்றோ ஆகியோர் இந்தியாவின் பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கோலின் மன்றோ 75, லதாம் 65 வில்லியம்சன் 64 ரன்களை எடுத்தனர். இந்திய அணியில் பூம்ரா 3, சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. மேலும் கோலி தலைமையில் தொடர்ச்சியாக 7 ஒருநாள் போட்டித் தொடர்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter