தேசிய அளவிலான செஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் நிறைவு


குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று(அக்.,24)  தொடங்கிய டாக்டர் என். மகாலிங்கம் 28 ஆம் ஆண்டு தேசிய செஸ் போட்டி நவம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை நகரில் தேசிய அளவில் நடைபெறும் செஸ் போட்டி என்பதால், வீரர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

9 நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில் 21 மாநிலங்களில் இருந்து 170 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று(அக்.,25)  நடைபெற்ற தேசிய செஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், தமிழக வீரர் ரத்னீஷ் மற்றும் தெலுங்கானா மாநில வீரர் எரிகைசி அர்ஜுன் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் இருவரிடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. ரத்தினவேல், சிபி விஷால், திலீப்குமார், அஸ்வின்குமார், ஹேம்நாத் ராம் ஆகியே தமிழக வீரர்கள் முன்னிலை பெற கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். 

இதேபோல, தருணிக்கா, செந்தமிழ் யாழினி, பூஜா, சனியுக்தா, பெனாஷிர் ஆகிய தமிழக வீராங்கனைகளும் இந்தப் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். 

இந்த தேசிய அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் 2018 ஆம் ஆண்டில் உலக செஸ் சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளனர்.



Newsletter