குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய செஸ் போட்டி துவக்கம்


குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் டாக்டர் என். மகாலிங்கம் 28 ஆம் ஆண்டு தேசிய செஸ் போட்டி இன்று (அக்டோபர் 24) துவங்கி நவம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது 20- ஆண்டுகளுக்குப் பிறகு கோவை நகரில் தேசிய அளவில் நடைபெறும் செஸ் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.



9 நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில் 21 மாநிலங்களில் இருந்து 170 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் செஸ் வீரர்கள் 2018 ஆம் ஆண்டில் உலக செஸ் சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளனர்.

முன்னதாக, இன்று நடைபெற்ற இப்போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் டாக்டர் என்.மகாலிங்கம் செஸ் அகாடமி துணைத் தலைவர் ரவி கந்தசாமி வரவேற்புரை ஆற்றினார். கேசிடி இணை தாளாளர் ஸ்ரீ சங்கர் வானவராயர் சிறப்புரையாற்றினார். . மேலும் செஸ் போட்டி மனதை கூர்மையானதாகவும், வலிமை மிக்கதாகவும் மாற்றும் என்று கூறினார்.



இதனைத்தொடர்ந்து, அனைத்து இந்தியா செஸ் பெடரேஷன் செயலாளர் பாரத் சிங் சௌஹான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று செஸ் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதையும், தற்போது இந்தியாவில் 50 கிராண்ட் மாஸ்டர்ஸ் உள்ளனர் எனவும் உரையாற்றினார். பிக். ஆர்பிட்டர்ஸ் கமிஷன் தலைவர் அனந்தராமன் உரையாற்றுகையில், இன்று தமிழ் நாட்டில் பல முன்னணி செஸ் போட்டியாளர்களை உருவாக்கி தந்தமைக்கு டாக்டர் என்.மகாலிங்கம் அவர்களுக்கு நன்றி கூறினார். மேலும் சக்தி குழுமம் சென்னை ஓபன் செஸ் போட்டிக்கு வருடா வருடம் பரிசு தொகையை வழங்கி வருவதற்கு தமது நன்றியை தெரிவித்தார்.

நிறைவாக தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் இணை செயலாளர் விஜயராகவன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter