வரும் 27-ம் தேதி மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

மாவட்ட அளவிலான மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வரும் 27ம் தேதி கோவையில் இராமகிருஷ்ணா வித்யாலாயா அரங்கில் நடக்கிறது.

மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனணயம் சார்பில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான போட்டிகள் வரும் 27-ம் தேதி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இராமகிருஷ்ணா வித்யாலாயா அரங்கில் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போட்டிகள் 27-ம் தேதி காலை முதல் நடைபெறும் எனவும், போட்டிகள் நான்கு வகையாக பிரிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் என பிரிக்கபட்டு, குழு போட்டிகளும் நடத்தபட உள்ளது. இப்போட்டிகளில் 50மீ, 100 மீட்டர் ஓட்டபந்தயம், சக்கர நாற்காலி, குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், டென்னிஸ் பந்து எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், குழு போட்டிகளில் இறகு பந்து போட்டிகள், டேபிள் டென்னிஸ், எறிப்பந்து மற்றும் கபடி போன்ற போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 

மேலும், போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு ஏதும் இல்லை என்றும், இதில், பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் மற்றும் மாவட்ட மறுவாழ்வு நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழ்களை நுழைவு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு, ஒருவர் ஒரு விளையாட்டு பிரிவில் மட்டுமே பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter