முதல்நிலை தகுதித்தேர்வு தடகள போட்டியில் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்ற தடகள வீரர்கள்

கோவையில் நடந்த மாவட்ட வாரியான முதல்நிலை தகுதித்தேர்வு தடகள போட்டிகளில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள் கலந்து கொண்டது போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மாவட்ட வாரியான முதல்நிலை தகுதி தேர்வு தடகள போட்டிகள் இந்தியன் ஸ்பீட் ஸ்டார் 3-வது சீசன், மத்திய பெட்ரோலிய துறையின் கெயில் இந்தியா பங்களிப்புடன், தேசிய இளையோர் கூட்டுறவு அமைப்புடன் இணைந்து கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று (அக்.,23) நடத்தியது.



இந்தியா முழுவதும் சிறந்த வீரர்களை கண்டறியும் விதமாக போட்டிகள் நடத்தபட்டு வருவதாகவும் நாடு முழுவதும் 115 இடங்களில் தகுதி தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய இளையோர் கூட்டுறவு அமைப்பு தெரிவித்திருந்தது. நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் இருந்து 2,000 பேர் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது.



இந்த நிலையில், இன்று காலை போட்டியை பா.ஜ.க மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைக்க வருகை புரிந்தார். அப்போது, குறைந்த அளவே வீரர்கள் கலந்து கொள்ள பதிவு செய்திருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.  பின்னர், போட்டிகளை துவக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

மத்திய பெட்ரோலிய துறையின் கெயில் இந்தியா பங்களிப்புடன் நடைபெறும் போட்டிகளுக்கு கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என அனைவரது பெயர்களும் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்த நிலையில், யாரும் பங்கேற்காதது விளையாட்டு ஆர்வலர்களிடையே சோர்வை ஏற்படுத்தியது.



இது குறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டபோது, தொடர் போட்டிகள் காரணமாக வீரர்கள் குறைந்த அளவிலேயே பங்கேற்றுள்ளனர் என தெரிவித்தனர்.

Newsletter