இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டி20 போட்டி மழை காரணமாக ரத்து



ஹைதராபாத்தில் நடக்க இருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி கனமழை காரணமாக ரத்தானது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது.

இந்த நிலையில் , இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் 7 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால், டாஸ் போடுவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மழை நின்று ஆட்டம் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கன மழையால் ஆடுகளத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இரவு 8.20 மணி அளவில் நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்தனர். அதில் உடனடியாக போட்டி தொடங்குவதற்கு ஏதுவான நிலையில் ஆடுகளம் இல்லை என்பது தெரியவந்தது. 

இதையடுத்து ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கிடையேயான டி20 தொடர் சமனில் முடிந்தது. ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில்,ஆட்டம் ரத்தானதால் மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Newsletter