ஆசிய கோப்பை ஹாக்கி: வங்கதேசத்தை 7-0 என்ற கணக்கில் துவம்சம் செய்தது இந்தியா



வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் வங்கதேசத்தை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

இன்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்தியா எதிர்கொண்டது. போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை பந்தாடியது. இந்தியாவின் ஹர்மந்தன் பீரித் இரட்டை கோல்கள் அடித்தார். 

இந்த வெற்றியின் மூலம் ஏ அணியில் வரிசை பட்டியலில் 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் பிடித்தது. இந்தியா லீக் ஆட்டத்தில் கடைசியாக வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியை எதிர்க்கொள்கிறது. பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் ஏற்கனவே உள்ளூர் அணியான வங்கதேசத்தை தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter