கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜுனியர் கூடைப்பந்து போட்டிகள் நிறைவு

தமிழ்நாடு கூடைப்பந்து கழகமும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகமும் இணைந்து மாநில அளவிலான “தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சேம்பியன்ஷிப் - 16” என்ற பெயரில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் கூடைப்பந்து போட்டிகள் கடந்த 15-ம் தேதி துவங்கி ஜூன் 18ம் தேதியன்று வரை நடைபெற்றது. இந்த போட்டிகள் பி.எஸ்.ஜி. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூடைப்பந்து உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆண்கள் பிரிவில் 26 மாவட்டங்களை சேர்ந்த 27 அணிகளும், பெண்கள் பிரிவில் 17 மாவட்டங்களை சேர்ந்த 18 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டன. இந்த போட்டிகளை அரைஸ் பவுன்டேஷன் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனமும் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து நடத்தியது.

ஞாயிறன்று நடைபெற்ற அரை இறுதி ஆண்கள் பிரிவு முதல் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணியை எதிர்த்து சென்னை மண்டலம் 2 அணி விளையாடியது. இதில் திருநெல்வேலி மாவட்ட அணி 82 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (கோகுல் 51, கேசவன் 15). எதிர்த்து விளையாடிய சென்னை மண்டல 2 அணி 71 புள்ளிகள் பெற்று தோல்வியடைந்தது (மௌனிஷ்வர் 20, லோகேஷ்வரன் 20, சரன்குமார் 19).

இதை தொடர்ந்து 7.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் மதுரை மாவட்ட அணியை எதிர்த்து திருவள்ளூர் மாவட்ட அணி விளையாடியது. இதில் திருவள்ளூர் மாவட்ட அணி 56 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (தனுஷ் 12). எதிர்த்து விளையாடிய மதுரை மாவட்ட அணி 45 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது (ருத்திக் ரோஷன் 19). 

தொடர்ந்து, பெண்கள் அரை இறுதி முதல் போட்டியில் தஞ்சாவூர் மாவட்ட அணியும் சென்னை மண்டலம் 2 அணியும் விளையாடியது. இதில் சென்னை மண்டல் 2 அணி 71 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (லட்சுமி பிரியா 32). எதிர்த்து விளையாடிய தஞ்சை மாவட்ட அணி 62 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது (ஆர்த்தி 18).

இதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை மண்டலம் 1 அணியும் நாகை மாவட்ட அணியும் விளையாடியது. இதில் சென்னை மண்டலம் 1 அணி 63 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (அஸ்விதா 15, பொன் சவுந்தர்யா 26). எதிர்த்து விளையாடிய நாகை மாவட்ட அணி 59 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது (புஷ்பா 44).

இதை தொடர்ந்து மாலை 3.00 மணிக்கு 2 மற்றும் 3 வது இடங்களுக்கான போட்டிகளும், அதை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு இறுதிப் போட்டியும் நடைபெற்றது.

இதில் ஆண்கள் அணியில் திருவள்ளூர் அணியும் திருநெல்வேலி அணியும், விளையாடியது. இதில் திருநெல்வேலி அணி 87 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய திருவள்ளூர் அணி 85 புள்ளிகள் பெற்று தோல்வியடைந்தது. நான்காவது சுற்றின் முடிவில் இரண்டு அணிகளும் 72 புள்ளிகள் பெற்றன. எனவே போட்டி மீண்டும் 5 நிமிடம் நீட்டிக்கப்பட்டது. இதன் இறுதியில் திருநெல்வேலி 87 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை மண்டலம் 1 அணியும், சென்னை மண்டலம் 2 அணியும் விளையாடியது. இதில் சென்னை மண்டலம் 1 அணி 64 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய சென்னை மண்டலம் 2 அணி 55 புள்ளிகள் பெற்று தோல்வியடைந்தது.



ஆண்கள் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த திருநெல்வேலி அணிக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் மற்றும் கேடயம், இரண்டாம் இடம் பிடித்த திருவள்ளூர் அணிக்கு பரிசாக 3 ஆயிரம் ரூபாய் மற்றும் கேடயம் மற்றும் மூன்றாவது இடம் பிடித்த நாகை மாவட்ட அணிக்கு 2 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் தனிநபர்க்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.

பெண்கள் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த சென்னை மண்டலம் 1 அணிக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் மற்றும் கேடயம், இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம் 2 அணிக்கு பரிசாக 3 ஆயிரம் ரூபாய் மற்றும் கேடயம் மற்றும் மூன்றாவது இடம் பிடித்த மதுரை மாவட்ட அணிக்கு 2 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் தனிநபர்க்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கூடைப்பந்து கழக தலைவர் வி.வி. ராஜ் சத்யன், பொறுப்பு செயலாளர் டி. பார்வேந்தன், மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Newsletter