தமிழ்நாடு விளையாட்டுத்துறை கழகம் சார்பில் வீரர்களுக்கான ஊக்கத்தொகையினை கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்


கடந்த ஆண்டு ஹரியானா ரோத்தக் மகரிஷிதயானந் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வான்டோ போட்டியில் 44 கிலோ எடை பிரிவில் ஸ்ரீ சவுடேஷ்வரி வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி அவதியா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். அதேப் பள்ளியைச் சேர்ந்த அஜய் வெண்கலப்பதக்கம் வென்றார். 

இதேப் போல அதேப்பள்ளியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீஹரன் மகாராஷ்டிராவில் நடைபெற்ற டேக்வான்டோ போட்டியில் 44 கிலோ எடை பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார். 

அகில இந்திய அளவிலான பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான பூப்பந்து போட்டியில் மங்களூர் பல்கலைக் கழக அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. இப்பல்கலைக் கழகம் சார்பில் விளையாடிய கோவை பரத்குமார் தங்கம் வென்றார். 

மேலும், கிருஷ்ணமாள் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு பி.காம் மாணவி அமிர்தா ஸ்ரீ சிவா சாஃப் டென்னிஸ் போட்டியில் அணி மற்றும் தனி நபர் பிரிவில் வெற்றி பெற்றார்.

இதனைத்தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்த வீரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் வென்றோருக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும், வெள்ளிப்பதக்கம் வென்றோருக்கு 4 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும், வெண்கலப்பதக்கம் வென்றோருக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Newsletter