நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் சிஆர்ஐ பம்ப்ஸ் இணைந்து சர்வதேச கூடைப்பந்து போட்டியில் இன்று இறுதிப் போட்டி

அகில இந்திய அளவில் கோவையில் நடைபெறும் கூடைபந்தாட்ட இறுதி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் வருமான வரி துறை அணியை எதிர்த்து இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி அணியும் பெண்கள் பிரிவில் சட்டீஸ்கர் அணியை எதிர்த்து தென் மத்திய ரயில்வே அணியும் விளையாடுகிறது.



அகில இந்திய அளவில் முன்னணி அணிகள் பங்கேற்கும் 52வது ஆண்டு ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை, மற்றும் 16ம் ஆண்டு பெண்கள் பங்கேற்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. 26ம் தேதி துவங்கிய இப்போட்டிகள் லீக் சுற்று முறை முடிவுற்று அரை இறுதியை எட்டியுள்ளது. ஆண்கள் பிரிவில் 8 அணியும் பெண்கள் பிரிவில் 7 அணிகளும் பங்கேற்றன. இதில் அரை இறுதி போட்டிக்கு ஆண்கள் பிரிவில் வருமான வரி துறை,இந்திய ரயில்வே அணி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, மற்றும் இந்திய விமானபடை அணிகள் தகுதி பெற்றன.



இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டிகளில் வருமான வரிதுறை அணி இந்திய ரயில்வே அணியை எதிர்த்து விளையாடியது. இதில் வருமான வரி துறை அணி 77-65 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு அரை இறுதியில் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியை எதிர்த்து இந்திய விமானபடை அணி விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்ஸீஸ் அணி 82-63 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் வருமான வரிதுறையுடம் விளையாடுகிறது. பெண்கள் பிரிவில் சட்டீஸ்கர் அணி கிழக்கு ரயில்வே அணியை எதிர்த்து விளையாடியது. இதில் சட்டீஸ்கர் அணி 69-60 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரை இறுதியில் கேரள மின்வாரிய அணியும் தென் மத்திய ரயில்வே அணி விளையாடியது. இதில் தென் மத்திய ரயில்வே அணி 52-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் சட்டீஸ்கர் அணியுடன் மோதுகிறது.ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர்.என்.மகாலிங்கம் கோப்பையும், அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற தவறிய இரு அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரமும், மேலும் தேர்வு செய்யப்பட்ட அணிக்கு நன்நடத்தை ரேணுகா ராமநாதன் நினைவு விருது வழங்கப்படுகிறது. சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற தவறிய இரு அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

Newsletter