கோவையில் சர்வதேச கூடைப்பந்து போட்டி மே 26ம் தேதி துவக்கம்

கோவையில் வரும் மே 26ம் தேதியன்று நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் சிஆர்ஐ பம்ப்ஸ் டிராபியும் இணைந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என சர்வதேச கூடைப்பந்து போட்டியினை நடத்தவுள்ளன.

இந்த சர்வதேச கூடைப்பந்து போட்டியானது நாச்சிமுத்து கவுண்டர் சார்பில் ஆண்களுக்கு என 52-வது முறையும், சிஆர்ஐ பம்ப்ஸ் சார்பில் பெண்களுக்கென 16-வது முறையும் நடத்தப்படவுள்ளது.

மே 26ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் சென்னை வருமான வரித்துறை, தில்லி இந்தியன் ஏர் ஃபோர்ஸ், ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி அப் குஜராத், மத்திய ரிசர்வ் போலீஸ் படை- தில்லி, சென்னை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, தில்லி இந்தியன் ரயில்வே, இந்தியன் நேவி- லொனவாலா மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் மற்றும் 8 முதன்மை நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதில் வெற்றி பெறும் ஆண் விளையாட்டு வீரருக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை வழங்கப்படும். மேலும், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும், டாக்டர் என்.மகாலிங்கம் கோப்பையும், மூன்றாம் இடம் பிடித்தோருக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

முதலிடம் பிடித்து வெற்றி பெரும் பெண் விளையாட்டு வீரருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பையும் வழங்கப்படும். தொடர்ந்து, இரண்டாம் இடம் பிடித்த போட்டியாளருக்கு 25 ஆயிரம் ரூபாயும், கோப்பையும், மூன்றாம் இடம் பிடித்தோருக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

கோவை வஉசி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு கூடைப்பந்து அசோசியேஷன் தலைவர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் சிறப்புரையாற்ற உள்ளார். சக்தி குரூப் ஆப் கம்பெனிஸ் தலைவர் எம்.மாணிக்கம், கோவை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் தலைவர் ஜி.செல்வராஜ், சிஆர்ஐ பம்ப்ஸ் துணை மேலாண்மை இயக்குநர் இப்போட்டியினை ஒருங்கிணைத்து நடத்தவுள்ளனர்.

Newsletter