தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உடுமலையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி!

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உடுமலை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் திருப்பூர் தடகள சங்கம் மற்றும் அரசு கலைக்கல்லூரி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வயது வாரியாக 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


திருப்பூர்: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உடுமலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி குழந்தைகள் உற்சாகமாக கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு திருப்பூர் தடகள சங்கம் மற்றும் உடுமலை அரசு கலை கல்லூரி இணைந்துகுழந்தைகளுக்கான 2 -வது தடகள போட்டிகளைநடத்தியது. உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் துவக்க விழா நிகழ்வாக கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு கலைக் கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி மற்றும் திருப்பூர் தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தனர்.



இதையடுத்து போட்டியில் பங்குபெற்ற வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி மைதானத்தில் வலம் வந்தனர்.



அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் ஒலிம்பிக் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதையடுத்து விளையாட்டுப் போட்டிகள் நான்கு நிகழ்வுகளாக 6 வயது, 8 வயது, 10 வயது, 12 வயது, 14 வயதுக்கு உட்பட்டோர் என 5 பிரிவுகளாக நடைபெற்றது.

நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், தடை தாண்டும் ஓட்டம், எரிபந்து, நின்ற இடத்தில் இருந்து நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றது. இதில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவை சேர்ந்த 5 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் 520 பேர் பங்கேற்றனர்.

உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது.

அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter