வட்டார கபடி போட்டியில் வென்ற கொமரலிங்கம் அரசு பள்ளி மாணவிகள் - விளையாட்டு சீருடை வழங்கி கௌரவிப்பு!

உடுமலை அருகேயுள்ள கொமரலிங்கம் அரசு பள்ளி மாணவிகள் அணியானது, சமீபத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான கபடி போட்டியில் வென்று அசத்திய நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில், விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள கொமரலிங்கம் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலை பள்ளியில், 692 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கல்வி மட்டுமின்றி, விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியருக்கு, ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அவ்வகையில், சமீபத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான கபடி போட்டியில் வென்ற இளையோர் பிரிவு மாணவியருக்கு, விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டன. சீருடைகள் பெற்ற மாணவிகளை, தலைமையாசிரியர் மாரியப்பன், உதவி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரபாபு, விஜயராகவன், சலுகாமா, ஆசிரியர் மதன்குமார் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை வெளிப்படுத்தும் வகையில், அவ்வப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தி ஊக்குவிக்க வேண்டும் என்பதே பெற்றோர் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter