தேசிய அளவிலான யோகா போட்டி - 2 தங்கம், 1 வெள்ளி பதக்கங்கள் வென்று கோவை மாணவி அசத்தல்!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கம் ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்கள் வென்று, கோவை திரும்பிய மாணவி வைஷ்ணவிக்கு, கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



கோவை: ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்று திரும்பிய கோவை மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை காட்சி ஊடகவியலில் (Visual Communication) பயின்று வருபவர் மாணவி வைஷ்ணவி.



இவர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு யோகா போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.



இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மூன்றாவது சீனியர் தேசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.



தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்ட வைஷ்ணவி 2 தங்கபதக்கங்கள் உட்பட மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

நாடு முழுவதிலும் சுமார் 28 மாநிலங்களை சேர்ந்த யோகா வீரர், வீராங்கனைகள் ஜோத்பூர் இறுதி போட்டியில் கலந்து கொண்டனர்.



இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவையை சேர்ந்த வைஷ்ணவி மூன்று பதக்கங்களை வென்று கவனத்தை ஈர்த்துள்ளார்.



ஜோத்பூரிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த வெற்றி வீராங்கனை வைஷ்ணவிக்கு பெற்றோர், உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இளம் வயதிலேயே யோகாவில் பல சாதனைகளை குவித்து வரும் வைஷ்ணவி செய்தியாளர்களிடம் கூறியதாவது,



ஜோத்பூரில் நடைபெற்ற தேசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், ஆர்ட்டிஸ்ட்டிக் மற்றும் ரிதமிக் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என இரண்டு தங்க பதக்கங்களை வென்றேன். மேலும், தமிழக அணியின் சார்பில் குழு போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளேன்.

தொடர்ந்து கோவாவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளேன். ஏசியன் கேம்ஸில் கலந்து கொள்வதை லட்சியமாக கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter